வளாக உரையாடலும் பாலினப் புரிதலும் - சி.விஜய்

0

கல்வி நிலையம் என்பது சமூகத்தின் மாதிரி வடிவம். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி அறிவியலை அறிவுசார் சமூக இயங்கியலை அறிந்து வாழ்வியலைக் கற்று மாணவர்கள் சிறந்த அறிவுத் தயாரிப்புகளாக சமூகத்திற்குள் அனுப்பப்படுகிறார்கள். படவேண்டும்.

ஆனால், கல்வி நிலையங்கள் குறிப்பாக தனியார் கல்வி நிலையங்கள் சமூகத்தின் ஒரு தரப்பினரால் நடத்தப்பட்டு அதே தரப்புக்காக செயல்படும் அவலம் இந்தியச் சமூகத்தின் சாபம். கல்வி நிலையத்தில் மதம், சாதி போன்ற அடிப்படைவாதங்கள் காப்பாற்றப்படுவதற்கான முயற்சிகள் இந்தியாவில் அதிகம் என்பதாலேயே அறிவுசார் தேடல்களுக்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்கக் கண்டடைவுகளை எட்ட முடிவதில்லை. இந்த அவலம் கல்வி நிலையத்தின் அனைத்துத் தளங்களிலும் பிரதிபலிக்கிறது.
அடிப்படைவாத அடையாளங்களைத் தக்க வைக்கும் முயற்சியாக நடைபெறும் நிகழ்வுகளில் முக்கியமானது ஆண்-பெண் உரையாடலுக்கான தடை.! ஒருவர் பிற பாலினத்தவரோடு பழகுவதால் அவர்களுக்குள் 'உடல்சார் காமுறுதல்' மட்டுமே நடைபெறும் என்கிற எண்ணப்போக்கெல்லாம் எத்தனைப் பிற்போக்குத்தனமானது.? ஆணையும் பெண்ணையும் பொதுவெளியில் ஒன்றாகக்கூடி உரையாடுதல் கூடாதெனத் தடையிடுவதால் எதை சாதிக்கப் போகிறோம்.? காமத்தின் ஒழுக்கம் மட்டும்தான் சமூக ஒழுங்கின் அடிநாதமா என்ன.? நல்வாய்ப்பாக மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதே இல்லை.! வந்தால்... அவர்களை எந்த நிலையில் வைத்திருப்போமோ.!?
மாணவர்கள் மாணவிகளுடன் உரையாடுதலால் நிகழும் தோழமை, காதல் போன்ற உயரிய உயிர்ப்பண்புகள் பழமைவாதிகள் சிலருக்கு துன்பம் தருகின்றன. சமூகத்தின் இறுகியக் கட்டமைப்பில் தளர்வுகளை ஏற்படுத்தும் நட்பும் காதலும் சமூக மாற்றத்திற்கானச் சிந்தனைகொண்ட அறிவுடையோரால் விரும்பப்படத்தானே வேண்டும்.
இருபாலர் கல்லூரிகளில் மாணவர்கள் இயல்பாகப் பேசிப்பழகுவதால் படிக்க வேண்டிய வயதில் கெட்டுப்போவதாக சில பழமைவாதிகள் கவலையுறுகிறார்கள். எனில் ஒருபாலர் கல்வி நிலையங்களாக அமைத்திருக்கலாமே.? இவர்களின் உண்மையானக் கவலை இந்தியக் கிராமங்களில் நிலவும் தமக்குத் தேவையானக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதே.
மாணவர்களுக்கு பாலினப் புரிதல் ஏற்படாதவரை பாலினச் சமத்துவத்திற்கான துளியளவு மாற்றமும் நடைபெறப்போவதில்லை. பாலினச் சமத்துவச் சிந்தனை ஆண்-பெண் உரையாடலில்லாமல் சாத்தியமேயில்லை. பெண் விடுதலை இக்கட்டுப்பாடுகளைக் கடக்காமல் நிகழப் போவதில்லை.
ஆண் பெண்விடுதலையைப் பேசுவதும், பெண் அறிவியல்வாதங்களை மேற்கொள்வதும் அரங்கங்களின் மைக்குகளில் தான் நடைபெறுமென்றால் முட்டாள்கள் யார்? வகுப்பறையின் வழியாகவே கல்வி முழுமையடைந்துவிடும் என்பதெல்லாம் முழு மூடத்தனமில்லையா.?
சுதந்திரச் சிந்தனையுடன் கல்வியின் வழியாக எதிர் பாலினப் புரிதலை ஏற்படுத்த மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம்கூட பெரியவர்களுக்கு இல்லையென்பது பழையப் பஞ்சாங்கப் பிதற்றலின் ஓர் அங்கமாகத் தெரியவில்லையா.?
பெண்ணை வேலியிட்டுக் காப்பதாக முரட்டுத்தனமான வாதங்களைப் புறக்கணிக்க வேண்டும். எத்தனை நாள் வேலியிடுவீர்கள்.? இந்த வேலிகள் வரலாற்றுக் காலந்தொடங்கி இருந்தும் தோற்றுப்போயின என்பதை அறியீர்களா.?
இம்மாதிரியான தடைகளால் மாணவர்கள் மத்தியிலும் பொதுவெளியிலும் என்னமாதிரியான அடையாளம் கிடைக்கும் தெரியுமா.?
கல்வியின் நோக்கம் சகமனித அன்புணர்வோடு நிகழும் உயிரியல் பண்புகளை மீட்டெடுத்து மானுடக் கூட்டுறவை மேம்படுத்துவது தான். அதற்குத் தடையிடும் எந்த ஒன்றும் கல்வி நிலையமில்லை.! எவர் ஒருவரும் ஆசிரியருமில்லை.!
உணர்க.!

Post a Comment

0Comments
Post a Comment (0)