இலக்கியம் என்பது புறவுலகின் காட்சிகள் மற்றும் வாழ்வனுபவங்களை உள்ளத்தமைந்து அகவயமான மனிதப் புலனுணர்வை, மொழிவழிப் பிரதியாக்கிக் கொள்ளும் மனிதச் செயல்முறையாகும். கவிமொழிதல் என்பது “மனம் கவிந்து மொழிதல்” எனும் திறம்பட்டச் செயலின் விளைவேயாகும். கவிமொழிதல் எனும் நுணுக்கம் மிக்க வேலைப்பாட்டிற்கு வாழ்வனுபவங்களின் வழி பெற்ற உணர்வுகளின் திரட்சியும் பௌதீக உலகியக்கியத்தின் மேம்பட்டப் புரிதலும் வளமையான மொழித்திறனும் இன்றியமையாதது. ஆக்கியோனின் அக, புறவுலகப் புரிதல்கள் இலக்கிய ஆக்கத்தின் இலக்காக தற்செயலாகவும் திட்டமிட்டவாறும் அமைந்துவிடுகின்றன. இலக்கியத்தின் இயக்கத்துள் ஆக்கியோனின் கருத்துநிலை வெளிப்படையாகவோ பின்புலமாகவோ அமைந்திருத்தல் உறுதி. காலந்தோறும் தமிழ்க் கவிமொழிதல் பல்வேறு கருத்தியல்களைக் கொண்டமைந்துள்ளது.
கவிமொழிக் கருத்தியல் வரலாறு
வரலாறு நெடுகிலும் கருத்தியலும் அதன்வழி கட்டமைக்கப்படும் வாழ்வொழுக்கங்களை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பொதுத்தளமாக இலக்கியமே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்க வேண்டும். ஏனெனில் மொழிவழி முன்வைப்புகள் மட்டுமே ஆவணமாக்கப்பட்ட, காலத்தின் பிரதிகளாக அமைகின்ற கட்டமைப்புடையன. இந்தியச் சமூகத்தில் உலகளாவிய அறிவியல் சிந்தனைகளின் திறப்புக் காலமான 20-ம் நூற்றாண்டில் பாமர மொழிதலுக்கு உள்ளானப் புத்திலக்கியங்களில் கவிதைமொழியின் புறப்பாடு தன் மொழிவெளிச் சுதந்திரத்தினை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், கருத்தியல் திணிப்புகளுடன் கொள்கைப் பிரசாரங்களாக ஒருசார்புடன் இயக்கங்கொள்வதாகவும், கவிமொழி இறுகியத்தன்மை பெற்று வெகுமக்கள் வாசிப்பினின்று அந்நியப்படுவதாகவும் குரல்கள் எழுந்துவருகின்றன. இக்குரல்களில் முன்வைக்கப்படும் வாதங்களை மதிப்பிட்டு ஆராய்வது அவசியமாகிறது.
காலந்தோறும் இலக்கியக் கருத்தியல்
மனிதனின் வாழிடச் சூழியலுடனான இயங்கியல் குறித்தப் புரிதலையே கருத்தியல் என்கிறோம். மனிதனின் உள வெளிப்பாடாக அமையும் கவிமொழி, வாழ்வியல் புரிதல்களான தத்துவங்களோடு நேரடித் தொடர்புடையன. மனிதப் புரிதல்கள் மாறுபடும் காலத்தின் ஊடாக மாற்றத்துக்குரியது. காலந்தோறும் தத்துவ நிலைகளும் இயைதல் - முரணுதல் பண்புகளுடன் ஒன்றையொன்று வெட்டியும் ஒட்டியும் செல்கின்ற பாங்கினை உடையன. ஒவ்வொரு காலத்திலும் படைக்கப்பட்ட இலக்கியங்களில் படைப்பாளன் உறுதிபட நம்புகின்ற அவ்வக்காலத்திய வாழ்வியல் தத்துவ அறிவையே மேம்பட்டதாக முன்மொழிகிறான். முன்னர் கூறப்பட்டக் கருத்தை மறுத்தலும், மாற்றுக் கருத்தை தகுந்தச் சான்றுகளுடன் நிறுவுகிறதலுமாகிய அறிவியல் இயக்கத் தன்மையைப் புரிந்துகொண்டாலன்றி இலக்கியக் கருத்தியல் மாற்றத்தினை அறிவது கடினம்.
தொன்றுதொட்டு தன்னுணர்தல்களை வாழ்வியலோடு ஒன்றித்து கவிமொழி இயங்கியுள்ளது. சங்க இலக்கியங்களின் பூதவாதம் எனும் இயற்கைவாதம், அறநூல்களின் ஒழுக்க முன்மொழிவு மற்றும் சீரமைப்புவாதம், காப்பியங்களின் மேலுலகக் கோட்பாடு, பக்தி இலக்கியங்களின் மீமெய்யியல், புராணங்களின் நனவிலி மனத்தியல்பு, சிற்றிலக்கியங்களின் தனியர் வியந்தோது மரபு, புதுக்கவிதைகளின் மாற்றுச் சிந்தனை மற்றும் விடுதலைக் கருத்தியல்கள், நவீன இலக்கியத்தின் உலகளாவிய அறிவியல் மற்றும் ஆய்வியல் கோட்பாடுகள் என தமிழ்க்கவிமொழியின் கருத்தியல் செல்நெறிப் போக்கினை பிரிக்கலாம்.
கவிமொழியும் கருத்தியல் ஒவ்வாமையும்
ஒரு கருத்து முன்வைக்கப்படும் போதே அக்கருத்தின் போதாமைகளை விமர்சித்து எழுகிற எதிர்க்கருத்தும் கருக்கொண்டு விடுகிறது. கருத்து ஒழுக்கமாகி பின்பற்றுதலுக்கு உள்ளாகி அதன் போதாமையை நிரப்பும் எதிர்க்கருத்து முந்தையதை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது. இதனைக் கருத்தியல் ஒவ்வாமை அல்லது மாற்றுக் கருத்தியல் என்கிறோம். இந்த மறுப்பியக்க நிலையும் மாற்றமும் எல்லாக் கருத்தியலுக்கும் பொதுவானது. தமிழ்ச் சமூகம் இவ்வாறான பல கருத்தியல் நிலை ஏற்ற இறக்கங்களையும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது.
சங்கம் மருவிய கால இலக்கியங்களின் கருத்தியல்கள் முன்பைக் காட்டிலும் வெளிப்படையான மொழிதல்களாக அமைந்துள்ளன. தமிழ்ச் சமூகம் நிலவுடைமைக் குழும வாழ்வியலிலிருந்து கோன்முறை அரசமைப்பிற்கு மாற்றமடைகையில் அரசமைப்புக் கட்டமைப்புகளுக்கு கருத்தியல் வடிவம் தந்து வலுவேற்றிக் கொள்ளவேண்டியத் தேவை ஏற்பட்டது. அத்தேவையை கவிமொழிகள் சாத்தியப்படுத்தின. அறங்கள் கவிமொழிவழி முன்வைக்கப்பட்டாலும் பொதுச்சமூகத்திற்கு நேரடியான கருத்துப் புலப்பாட்டு தன்மையுடன் தத்துவக் கோட்பாடுகளை எளிய சொல்லாடல்களுடன் முன்வைத்தன. சமயக் கோட்பாடுகள் கோன்முறை அரசமைப்புக்கான நிலைத்த அதிகாரங்களை உறுதிசெய்யப் பயன்பட்டன. அறநூல்களின் வலியுறுத்துக் கவிமொழி சற்றேரக்குறைய சமண, பவுத்தக் கோட்பாடுகளுடன் ஒட்டியே அமைந்துள்ளது காண்க.
கவிமொழிக் கட்டுப்பாடும் சமயக் கருத்தியல்களும்
தம் கருத்தை பொதுத் தளத்துக்கு வழங்குகின்ற எந்த ஒரு இலக்கியமும் சார்புத்தன்மை உடையதே. அவ்வகையில் கீழ்க்கணக்காகிய அறக் கவிமொழி இலக்கியங்களின் ஒழுக்க வலியுறுத்து மொழிதலின் பின்புலக் காரணிகள்வழி தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்தத் திருப்புமுனைகளையும் சமண, பவுத்தச் சமயங்களுடன் முரணி நிற்கும் பூதவாத, உலகாயதக் கொள்கைகள் முன்வைக்கும் வாதங்களையும் பேரா.அருணன் தமிழர் தத்துவ மரபுகளாக ஆய்ந்தளித்துள்ளார்.
சங்க காலந்தொட்டே வைதீக, வேத, வேள்விக் கருத்தியல்கள் தமிழ்ச்சமூகத்தில் நிலவிவந்தாலும் அவை இலக்கிய வடிவெடுத்து பொதுச்சமூக ஒழுக்கங்களாக நிலைநிறுத்தப் பெற்றது பக்தி இலக்கிய காலத்திலேயே ஆகும். பல்லவ, சோழக் கோன்முறைச் சமூக ஆதரவுடன் முன்மொழியப்பட்ட நம்பிக்கைகளுடனான “மீக்கருத்து முதல்வாத”மாகவே சைவ, வைணவக் கோட்பாடுகளை அறிய வேண்டியுள்ளது. வேதவாத, வைதீகக் கருத்தியல்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மக்களின் நம்பிக்கைசார் வாழ்வனுபவங்களாக நிலை நிறுத்தப்பட்டன. வைதீகக் கவிமொழியின் உள்ளடக்கங்களை ஆயுங்கால் அக்கால இலக்கியப் பெருவெளி பக்திமையை நுவல்பொருளாக ஏற்றமைய வேண்டியச் சூழலை கோன்முறை நியமங்களால் உருவாக்கி இருத்தலை உணர முடிகிறது.
அரசதிகாரமும் இலக்கியத்துள் ஆதிக்க வைதீகமும்
வைதீகக் கருத்தியலின் போதாமைகளை இலக்கியத்தில் முன்வைக்கின்ற வாய்ப்புகள் குறுக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டிருந்தன. வேதமரபுகளின் சார்பினின்று தமிழ்ச்சமூகத்தின் வழிபாட்டுநெறியும் இயற்கை மைய இறையியல் கோட்பாடுகளும் திரிபுகளுக்கு ஆட்பட்டன. புராணியத்தன்மை பெற்றமைந்தன. புராணங்கள் சூழியல் குறித்தக் குறைபுரிதல்களுடன் புனிதத்துவ முன்வைப்புகளை மரபுகளாக்கி, கால மாற்றங்களையும் கள அறிவியலையும் மறுத்தமைந்தன.
பக்தி இலக்கியங்களின் கருத்தியல் முரட்டுவாதங்களின் உள்ளடக்க இறுக்கத்தைத் தவிர்க்கவே இலக்கிய உருவமைப்பு அழகியல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. வேற்றரசர் காலத்தில் இலக்கிய மய்யத்துக்குள் கருக்கொண்ட வைதீக நுவல்பொருட்கள் பிற்கால சோழ, பாண்டிய அரசுகளால் கண்மூடித்தனமாக ஆதரிக்கப்பட்டன. இக்காலத்தில் மாற்றுக் கருத்தியல்களான சமண, பவுத்த, உலகாயதக் கருத்தியல்களின் மீதான வெறுப்புணர்வு சைவ, வைணவ பக்திக் கவிமொழிகளால் முன்வைக்கப்பட்டது. தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியக் கலைப்புலத்தில் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சபட்சக் கருத்தியல் திணிப்பும் பிரசாரமும் நடைபெற்ற காலம் பக்தி இயக்கக் காலமேயாகும்.
கவிமொழியும் மாற்றுக் கருத்தியல் நீர்ப்பும்
மாற்றுச் சிந்தனையுடன் சித்தர்களின் இலக்கிய இயக்கங்கள் சமயக் கூறுகளின் விளக்கங்களாகவும் சீர்திருத்த வாதங்களாகவும் ஆங்காங்கே எழுந்தாலும், அவை புராணிய இலக்கியங்களைப் போல வீச்சையும் பொதுவெளிப் பரவலையும் பெற்றிருக்கவில்லை. சைவ, வைணவ பக்திமைக் கருத்தியல்களின் வீரியம் 16ம் நூற்றாண்டு வரை தமிழ்க் கவிமொழியினைப் பீடித்திருந்தது. மாற்று இறையியலான இசுலாமியச் சமயக் கருத்தியல் ஓரளவு மாற்றமுடையதென்றாலும் இசுலாமிய இலக்கியங்களிலும் புராணியத் தன்மைகளே மிகுந்திருந்தன. 17ம் நூற்றாண்டுக்குப்பின் சமயச் சீர்திருத்த இயக்கங்கள் இலக்கியத் தளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தன. ஆனாலும் அவை வலுபெறாதவாறு உடனுக்குடனே பக்திமைக் கவிமொழி இலக்கியத்தாரால் கடிந்துரைக்கப்பட்டு மறுப்பிலக்கியங்களும் எழுந்தன. சான்றாக, சமயச் சீர்திருத்தவாதத்தினை முன்வைத்த வள்ளலாரின் கவிமொழியாகிய திருஅருட்பாவுக்கு ஆறுமுக நாவலரிடமிருந்து கண்டன மறுப்பாக மருட்பா கவிமொழி வெளிப்பட்டது. மாற்றுச் சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கவிமொழிச் செயல்பாடுகளை சைவ சித்தாந்த விளக்க நூற்றொகைகள் முன்னெடுத்தன. ஆதிசங்கரர், இராமானுசர், மத்வர் என அடுத்தடுத்து வேத விளக்கங்களும் தரப்பட்டன.
காலனியமும் புத்திலக்கியப் போக்கும்
ஐரோப்பியர்களின் வரவு தமிழ்ச் சமூகத்தின் அரசமைப்பு முறைகளின் சிந்தனைப் புலங்களிலும் அறிவியல் ரீதியிலான பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அறிவியலின் வாதங்கள் அனைத்து புராணியக் கட்டமைப்புகளையும் உடைத்தன. 17ம் நூற்றாண்டுவரை புராணிய அறிவையே பேரறிவாக முன்வைத்த இலக்கிய ஆக்கிகள் காலனிய அரசதிகாரத்துடன் ஒட்டிக்கொள்ளும் நோக்கில் கிறித்தவ சமய நூலாக்கங்களுக்கு துணைநின்றனர். சமயக் கருத்தியல் இறுக்கங்களைத் தளர்த்திக் கொண்டனர். வள்ளலாரின் சமயச் சீர்திருத்த வாதத்தினையே மறுத்துக் கவிமொழிந்த ஆறுமுக நாவலர் பைபிளை மொழிபெயர்க்கத் துணைநின்றார். கர்த்தர் என்கிற சொல்லாடலைத் தந்தவர் அவரே. கிறித்தச் சமயத்திற்கான கவிமொழி இலக்கிய ஆக்கங்கள் வடிவம் பெற்றன. பொருளியல், மொழியியல், தகவல் தொடர்பியல், தத்துவவியல் உள்ளிட்ட பல துறைகளிலும் அறிவியல் சிந்தனைகள் மிகுந்த காலமாகக் காலனியக் காலத்தைக் குறிப்பிடலாம். உலகாயதம் எனும் இயற்கை அறிவியல்வாதக் கோட்பாட்டுத் தொடர்புடைய தமிழ்ச்சமூகம் இந்த மாற்றங்களை விரைந்து செறித்துக்கொண்டது.
சீகன்பால்க், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யூ.போப், பெர்சிவல், எல்லீசு போன்ற ஐரோப்பியர்களால் வழங்கப்பட்ட மொழிசார் இலக்கியக் கொள்கைகளும் கருவிகளும் மேலைநாட்டு இலக்கியக் கொள்கைகளின் அறிவியல் ரீதியானத் தாக்கங்களும் தமிழர்களின் அரசியல் விடுதலைச் சிந்தனையை வளர்த்தெடுக்க உதவின. பக்திக் கவிமொழிகளின் வழியாக நிலைநிறுத்தப்பட்ட “அதிகாரத்தின் கீழடங்குதல்” எனும் கற்பிதங்களை புதுக்கவிமொழி உடைத்தது.
தமிழில் விடுதலைக் கருத்தியலை மொழிவீரீயத்துடன் முன்வைத்த பாரதி, அறிவியல்வாத மாற்றுச் சிந்தனையுடன் கருத்தியல் தெளிவினையும் இலக்கிய அமைப்பியல் மாற்றத்தையும் ஐரோப்பிய இலக்கியங்களே வழி பெற்றிருந்தார். தமிழ் இலக்கிய வெளியில் விடுதலை உணர்வு மேலெழுந்திட இலக்கியப் படைப்பினை மேற்கொண்ட பாரதியின் கவிமொழிதலில் பிரெஞ்சுப் புரட்சி இலக்கிய முகங்களான வால்டேயர், ஷெல்லி உள்ளிட்டோரின் “மறுப்பு, மாற்று, தீர்வு” எனும் முன்வைப்புகளைக் காண முடியும். பாரதியின் மாற்றுச் சிந்தனை தமிழ்க் கவிமொழியின் கருத்தியல் போக்கையும், இலக்கியப் பொதுவெளிப் பரவலுக்கான கவிமொழி உருவமைப்பிலும் பெரும் திறப்புகளை உருவாக்கியது. பாரதிக்குப் பிந்தைய தமிழிலக்கியப் போக்கு அறிவியல் சிந்தனையுடன் அரசியல் விடுதலையை முன்வைத்து இயங்கியது.
தமிழிலக்கியமும் விடுதலைக் கருத்தியல்களும்
தமிழ்ப் புதுக்கவிமொழியின் விடுதலைச் சிந்தனை பாரதியின் காலனிய எதிர்ப்புப் புள்ளியில் தொடங்கி பொருளியல், நிலவியல், சமூகவியல், பண்பாட்டியல் தளங்களுக்கு நீண்டது. பாரதிதாசன் உள்ளிட்ட திராவிடக் கருத்தியல் கவிமொழியாளர்கள் மானமிகு வாழ்வுரிமைகளான மானுட இயற்கை அறங்களின் மீட்டுருவாக்கத் தேவைகளை முன்வைத்தன. இலக்கியத்தளத்திலும் கருத்தியல் தளத்திலும் உலகளாவிய அறிவியல் வளர்ச்சியும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய 19ம் நூற்றாண்டு தமிழ் மண்ணில் சமத்துவக் கருத்தியல்களின் எழுச்சிமிக்க காலமாகும்.
குறிப்பாக, அடிமைத்தனங்களின் பின்னியங்கும் முதலாளித்துவ பொருளியல் சுரண்டல் அமைப்புகளின் எதிரியக்கக் கருத்தியலான காரல்மார்க்ஸின் பொதுவுடைமைக் கருத்தியலும், சனாதன ஆரியக் கருத்தியலின் எதிரியக்கக் கருத்தியலான தந்தை பெரியாரின் திராவிடக் கருத்தியலும் தமிழ் இலக்கியத்தளத்தைப் புரட்டிப் போட்டன. அதுவரை கவிமொழிப்புலத்தை ஆக்கிரமித்திருந்த பக்திமைவாதம் எதிர்வாதங்களால் மதிப்பீடு செய்யப் பெற்றது. தமிழர் அற வாழ்வுக்கு ஒவ்வாத வழக்கங்களை தமிழிலக்கியங்கள் மூடத்தனங்கள் எனக் குறித்தன. தமிழ் இலக்கியத்தளம் புத்திலக்கிய வகைமைகளுடன் இயங்கிய இக்காலத்தில் தமிழ்க் கவிதைத்தளம் கருத்தியல் வளமை பெற்றிருந்தது. பொதுவுடைமைக் கருத்தியலும் திராவிடக் கருத்தியலும் அயோத்திதாசரின் தமிழியக் கருத்தியலும் ஒருசேர சனாதன, சாதியக் கட்டுமானங்களை மறுத்துரைத்தன. அரசர்களும் கடவுள்களுமே இலக்கிய நுவல் பொருட்களாகியிருந்த தமிழ்க்கவிமொழி பாமர உழைக்கும் மக்களை நுவல்பொருள் மய்யத்திற்குள் கொண்டுவந்த இக்கால கட்டத்தை தமிழிலக்கியக் கருத்தியல் மறுமலர்ச்சிக் காலம் எனக் குறிக்கலாம்.
19ம் நூற்றாண்டில் பொதுவுடைமை மற்றும் திராவிடக் கருத்தியல் அடையாளங்களாக அறியப்பெற்ற தலைவர்களின் மறைவும் அடுத்தகட்ட தலைவர்களின் மீதான பொதுவெளி நம்பிக்கையும் சில தொய்வுகளை ஏற்படுத்தியதன் விளைவாக ஒரே கருத்தியல் நிலைப்பாட்டின் மாறுபட்ட இயக்கங்கள் தோன்றலாயின. அவைதீகக் கருத்தியல் இயக்கங்களாக எழுந்த அனைத்துப் பிரிவுகளும் வரலாறு நெடுக இந்தச் சிதைவுகளுக்கு ஆட்பட்டுள்ளமையுண்டு. காலமாற்றத்தில் எக்கருத்தியலிலும் சில போதாமைகள் உணரப்படுவதுண்டு. இந்தப்போக்கு தமிழ்க் கவிமொழி இலக்கியத் தளத்திலும் எதிரொலித்தது. கருத்தியல் உள்முரண்கள் கவிமொழி வழியாகவே கடும் விவாதங்களை நிகழ்த்திக் கொண்டன. சான்றாக, இன்குலாப்பின் தீவிரப் பொதுவுடைமை விடுதலைக் கருத்தியலையும் தணிகைச்செல்வன் – கண்ணதாசன் இடையேயான கருத்தியல் தர்க்கங்களையும் குறிப்பிடலாம். பொதுவுடைமை இயக்கப் பிளவு, திராவிட இயக்கப் பிளவு, தமிழ்த் தேசியச் சிந்தனையின் எழுச்சி, அம்பேத்கரின் தலித்திய விடுதலைப் புலம் என அரசியல் தளத்தையொட்டி தமிழ் இலக்கியத் தளமும் மாற்றங்களை அடைந்தது.
தீவிர இடதுசாரிய விடுதலைச் சிந்தனை நக்சல்பாரி இயக்கமாகவும் உருவெடுத்தது. இவ்வனைத்து அரசியல் கருத்தியக்கங்களும் தத்தம் கருத்துக்களை தனிப்பாணி தனிப்பார்வையுடன் கவிமொழிதலுக்கு உட்படுத்தின. சான்றாக, இடதுசாரியக் கவிமொழிதலில் கு.சின்னப்ப பாரதி - ஜீவானந்தம் – கந்தர்வன் – பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் – இன்குலாப் – தணிகைச்செல்வன் – பா.செயப்பிரகாசம் என்கிற வரிசைப்பாட்டினை கருத்தியல் கவிமொழிதல் நோக்கில் எடுத்தாய்ந்தால் காலந்தோறும் இடதுசாரிய விடுதலைக் கருத்தியலின் போக்கினைக் கண்டுணர முடியும். கருத்தியல் உள்முரண்கள் இயக்கக் கருத்தியலிலும் கருத்தியல்சார் இலக்கிய மொழிதலிலும் வெளிப்பட்டமைகின்றன. இடதுசாரிய இயக்கங்கள் மார்க்சியக் கருத்தியல் புரிதலுடன் இந்திய முதலாளியத்தின் நிலவுடைமைக் கட்டமைப்பையும், சுரண்டல் நிறுவனங்களாக நிலைபெற்றுவிட்ட சமயங்களின் உள்ளியக்கங்களையும், காலனிய முதலாளியத்தின் சுரண்டலையும், காலனிய விடுபாட்டுக்குப் பிந்தைய நவீன முதலாளிய அமைப்புகளையும் வெகுமக்களிடம் எடுத்துச்செல்ல தமிழ்க் கவிமொழிப்புலத்தினைப் பயன்படுத்தின. கவிமொழிப்புலம் பெருவாரியாக கருத்தியல் வாதங்களுக்கு வலுவேற்றியமைக்கு வானம்பாடிகள் சான்றாவர்.
தமிழ்க்கவிமொழியும் நவீன, பின்நவீனத்துவக் கருத்தியலும்
இடதுசாரிகளால் தமிழிலக்கிய வெளியில் நிகழ்த்தப்பெற்ற பொருளியல் கருத்தியல் விசாரணைகளும் திராவிட இயக்க அவைதீக வாதங்களும் தமிழ்ச்சமூகத்தின் அறிவுத்துறைகளை தத்துவவியல் பார்வையுடன் செலுத்தின. இதன் காரணமாக மக்கள் வாழ்வியல் மாற்றங்களைப் பெற்று வாழ்வுக்கான உரிமைப் புலப்பாட்டுப்புலமாக கவிமொழித்தளம் இயக்கம் கண்டது. தமிழ்க் கவிமொழி வளமையான கருத்தியல் அடிப்படைகளுக்குத் திரும்பியபோதும் உள்முரண்களை சரிசெய்து இலக்குகளைக் கூர்மைப்படுத்தி பயணிக்கிற வாய்ப்பினைத் தவற விட்டுள்ளமை ஆய்வுக்குரியது.
நவீனச் சமூக அமைப்புகளையும், பின்னைநவீன மாற்றுச் சிந்தனைகளுமாக தமிழ்க் கவிமொழிப்புலத்துள் மாற்றுச் சிந்தனைகள் ஒன்றையொன்று ஏற்றும் மறுத்தும் விவாதித்துக் கொள்கின்றன.
நவீனக் கவிமொழிதலின் சிதைவு
நவீனக் கூட்டு மற்றும் தரகு முதலாளியச் சூழலில் கவிமொழியுள் வெளிப்படும் மீக்கருத்தியல் தர்க்கங்களும் கடினச் சொற்ப்பயன்பாடும் பாமர மக்களின் வாசிப்புத் தளங்களிலிருந்து விலகி நிற்பது உண்மையே. புதுக்கவிமொழி மக்களுக்கான அரசியலை முன்வைத்த எளியத் தன்மையினின்று நீங்கி கடினச் சொல்லாடல்களுடன் இயக்கங்கொள்வது தமிழ்க் கவிப்புலத்தின் கெடுவாய்ப்பாகும். கலை மக்களுக்கானதென்றால் அது மக்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மக்கள் மொழியில் அமையப்பெறாதக் கவிமொழிதல் கருத்தியல் விவாதங்களைத் தவிர்க்கவும் மக்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவும் நிறுத்தப்படவும் முயலுவதாகவே கருத இடமுளது. அவ்வாறாயின் நவீனக் கவிமொழிதல் இலக்கியத்தின் ஆன்மாவையும் நோக்கக் கூறுகளையும் சிதைப்பதாகவே அமையும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
கவிமொழி புத்தெழுச்சியும் மீள்கட்டமைப்பும்
கவிதை மொழி வரலாறு நெடுகிலும் பலவாறான உடைவுகளையும் மறுகட்டுமானங்களையும் கண்டுள்ளது. குழும விளிம்புகள் தொழில்நுட்பங்களால் தனிநபர் விளிம்புகளாக தமிழ்ச்சமூகம் கலைக்கப்பட்டுள்ள இக்காலத்தில், தனக்கான வாழ்வுரிமை, பண்பாட்டு அடையாள உரிமைகோருதலை இலக்கிய வழியாக மேற்கொள்ளவும் அணியமாதலுக்கான கருத்தொற்றுமை எட்டப்பட வேண்டியதாகிறது. அவைதீக, முற்போக்கு, அறிவியக்கங்களின் கருத்தியல் உள்முரண்கள் வைதீக சனாதனக் கருத்தியலுக்கு வழிதிறக்கின்ற வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.
தமிழ்க்கவிப்புலம் எளிய உழைக்கும் மக்களுக்கான வாழ்வுரிமைகளைக் காக்கும் தேவையையொட்டி கருத்தியல் உள்முரண்களை விவாதிக்க வேண்டிய அதேவேளையில் கொள்கை ஒத்திசைவோடு இயங்க வேண்டியதும் கட்டாயமாகும். கவிமொழி ஒரு கட்டுக்குள் சிக்குண்டு பொது வாசக மனத்திற்குத் தொலைவாகச் செல்லுதலையும் தவிர்க்கின்ற விதமாக மக்கள் மொழியில் கவிமொழி இயலுதல் வேண்டும்.
துணையமைந்த நூல்கள்
- பேரா.அருணன், தமிழர் தத்துவ மரபு, வசந்தம் பதிப்பகம், மதுரை.
- ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தமிழ்ச்சமூக உருவாக்கமும், NCBH.
- ராஜ் கௌதமன், அறமும் ஆற்றலும், NCBH சென்னை.
- கோபட் கந்தி, சுதந்திரமும் மக்கள் விடுதலையும், விடியல் பதிப்பகம், கோவை.
- அய்ஜாஸ் அகமது, பின்நவீனத்துவம், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
- புதுக்கவிதைத் திறன், இரா.மோகன், மெய்யப்பன் பதிப்பகம்
- “நவீனத் தமிழ்க் கவிதையின் போக்குகள்” கரிகாலன், மருதா பதிப்பகம்.
- “புதியக் கவிதைகளில் மார்க்சியம்”, ஆ.செகந்நாதன், மணிவாசகர் பதிப்பகம்.
- “கவிதையின் உயிர் உடல் உள்ளம்”, க.ப.அறவாணன், பாரி நிலையம்.
- “சமூகவியலும் இலக்கியமும்”, க.கைலாசபதி, நியூ செஞ்சுரி புக்ஸ்.
- “கலை இலக்கியம் ஓர் தத்துவப் பார்வை”, ஞானி, வேள்வி வெளியீடு, கோவை.
- “மார்க்சிய சமூகவியல் கொள்கை”, நா.வானமாமலை, NCBH சென்னை.
- புதுக்கவிதை புதுப்பார்வை”, பாலா, அகரம் வெளியீடு
- “புதுக்கவிதையில் இலக்கிய இயக்கம்”, இரா.சம்பத், உமா பதிப்பகம், புதுவை.
- “தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்”, ந.முத்துமோகன் - NCBH சென்னை.
- “நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்”, கைலாசபதி - குமரன் பதிப்பகம்
- “கவிதை இயங்கியல் பா.செல்வகுமார்” - கீற்று வெளியீட்டகம்
- “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” ஜெயமோகன் - உயிர்மை பதிப்பகம்
- “தமிழ் இலக்கிய வரலாறு” ஞா.குருசாமி - அகரம் பதிப்பகம்