ஆளும் வர்க்கத்தால் "மன்னு" என அடிமையாக அழைக்கப்பட்டவன் "மன்னனாக அல்ல, மாமன்னனாக" மாறுவதே கதை
இன்றைக்கு தமிழ் சினிமா தனது வியாபார மோகத்திலிருந்து படிப்படியாக தன்னை விடுவித்துக் கொண்டு இன்று முற்போக்கு, சமத்துவ, சமூக நீதி பேசுகிற திரைப்படங்களை உருவாக்கி இந்திய சினிமாவே கொண்டாடும் அளவிற்கு வெற்றிப் பல்லக்கில் ஏறி பயணிக்கிறது. அதுவே ஒரு பாராட்டத்தக்க நிலையாகும் 2000க்கு முன்பு இது போன்று சினிமாவில் வர அன்றைய அரசியல் நிலைமைகளும், ஆளும் வர்க்கமும் இடம் கொடுத்ததே இல்லை. இன்றைக்கு அந்த நிலை எல்லாம் மாறி இருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் நாயகன் பன்றி வளர்த்ததும் இல்லை. அதனை நாயகி எடுத்து கொஞ்சியதாக காட்சிகளையும் கண்டதில்லை. நான்கு திசைகளிலும் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பண்ணையில் நுழைந்து இரத்த வெறி கொண்ட நாய்கள் பன்றிகளின் மூர்க்கத்தனம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையை உணர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி அனைத்தையும் கொன்று குவிக்கும். அந்த வன்முறை வெறியாட்டத்தில் தனது தாயை, குடும்பத்தை, உறவினர்களை இழந்து உடல் நடுக்கத்துடன் மரத்தின் வேரில் அடைக்கலம் அடையும் அந்த பன்றி குட்டியின் நிலை கண்டு நாயகன், மாமன்னன், நாயகி லீலா ஆகியோர் அழும் காட்சியும், பின் அதை நாயகன் பெற்ற தாயின் அரவணைப்பில் வளர்க்கும் காட்சியும் நம்மை உணர வைத்து உருக வைக்கும். நம் மனதில் படிந்துள்ள அழுக்குகளை துடைத்தெடுக்கும்.
என்னோடு திரையரங்கில் படம் பார்த்த நண்பர்கள் அனைவரும் இளம் வயதினர், அவர்களது உணர்வுகள் எல்லாம் "என்னடா இது. ஆனா ஊனா அந்த உயர்ந்த ஜாதிக்காரன் தப்பு என்கிறார்கள். அவனை எதிர்த்து பதிலுக்கு இவன் அடிக்கிறான், இது மட்டும் எப்படி சரியா இருக்கும்" என்கிறார்கள். சிறு புழுவோ, பூச்சியோ, எறும்போ தன்னை விட ஒரு பெரிய உயிரினம் தன்னை தாக்கி அழிக்கும் முயற்சியில் இருக்கும்போது பற்களால் கடித்தோ அல்லது தன் கொடுக்கால் கொட்டியோ தனது எதிர்ப்பை பதிவு செய்யும். அதன் பின்னே அது தன் உயிரை இழக்கும். அது போலவே இங்கு மனித இனத்தில் ஆண் - பெண், கருப்பு - வெள்ளை, ஆண்டவன் - அடிமையானவன் என்கிற வேற்றுமை வெறியில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர நாம் மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் என்னும் தத்துவத்தின் கண்கொண்டு காண வேண்டும்" என்ற உணர்வு எழுந்தது எனக்கு.
சுரேஷ் இசக்கிபாண்டி |
கதையின் துவக்கத்தில் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வரும் மாமன்னன் தன்னை சந்திக்க வரும் மக்கள் எவராக இருந்தாலும் அனைவரையும் அமரவைத்து பேசும் வழக்கத்தை கொண்டவராக இருப்பார். ஆனால் அதே சட்டமன்ற உறுப்பினரை பல ஆண்டுகளாக கட்சி மாவட்ட செயலாளர் வீட்டில் நிற்க வைத்து பேசும் நிகழ்வும் நடந்திருக்கும்.
அதற்கு அவர்கள் (ஆண்டைகள்) தரும் விளக்கம் "உன்னை நிற்க்க வைத்து பேசியது என்னுடைய அடையாளம். உன்னுடைய மகனை உக்கார சொல்லுவது (மாமன்னனனின் மகனை) என்னுடைய அரசியல்" என்று சொல்லும் வசனத்தின் மூலம் அழுத்தமான முறையில் அடித்தட்டு மக்களின் அரசியல் நிலையை பதிய வைத்துள்ளார் இயக்குநர்.
அதேநேரத்தில் தமிழக முதல்வராக வரும் லால் சமாதானம் பேசுமிடத்தில் "மாமன்னன் அதுவரையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அடிமையாக (மன்னு) இருந்து பெற்று வந்ததை தவறு என உணர்ந்து, தனது மகனின் ஆவேச கேள்வியால் கிடைத்த அரியணையை பிடித்த வடிவேலு (மாமன்னன்) அந்தக் கணத்திலிருந்து மன்னனாக அல்ல, மாமன்னனாக மாறுகிறார்".
ஒரு தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் மட்டுமே விடையாகாது. மாறாக தொடர் போர் களம் கண்டோ (போராட்டம் நடத்தியோ) தான் இங்கு மானுட விடுதலையை அனைவரும் அடைந்திட முடியும்.
படம் மிக மிக அருமை.
ஆயிரம் அன்பு முத்தங்கள்
அன்பு தோழர். Mari Selvaraj மாரி செல்வராஜூக்கு....
சுரேஷ் இசக்கிபாண்டி, தூத்துக்குடி மாவட்டம்