நாகர்கோவில், ஜூன் 29
மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நோய்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு நேரடியாக தேடி சென்று சேவை செய்யும் திட்டமாகும். குமரி மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது :
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொண்டு, நோய் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் இரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்ட 91,532 நபர்களுக்கும், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 65,623 நபர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 63,236 நபர்களுக்கும், படுக்கை நோயாளிகள் 8792 நபார்களுக்கும், புற்றுநோய் தொடர்புடைய 274 நபர்களுக்கும், உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) வாயிலாக 9610 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இத்திட்டத்தில் வேலை செய்யும் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் மற்றும் தமிழக அரசுக்கும் இதனால் பயனடைந்தோர் நன்றி தெரிவித்தார்கள்.